கல்வராயன்மலையில், 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - ஒருவர் மீது வழக்கு
கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை உள்ளது. இங்கு மர்மநபர்கள் அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை தடுக்க உள்ளூர் போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பது என்பது போலீசாருக்கு சிம்மசொப்பனமாக உள்ளது. இந்த நிலையில் கரியாலூர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, துரை உள்ளிட்ட போலீசார் நாராயணபட்டி, சின்னதிருப்பதி, எருக்கம்பட்டு, மேல்பாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாராய வேட்டையில் களம் இறங்கினர். அப்போது சின்ன திருப்பதி வடக்கு வனப்பகுதியில் கள்ளச்சாராயம் ஊறல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர்.
இதையடுத்து சாராய ஊறலை பதப்படுத்தி வைத்திருந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சின்னதிருப்பதி கிராமத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் சாராய ஊறலை பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி சென்றபோது தலைமறைவாகி விட்டார். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக உள்ள திருமலையை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை போலீசார் அழித்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம், ஏட்டு கோகிலா உள்ளிட்ட போலீசார் குறிப்பிட்ட கிராமத்துக்கு சென்று அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் 500 லிட்டர் சாராய ஊறல், 25 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் அழித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.