விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு - 146 பேருக்கு நோய் தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார். 146 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,730 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 94 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 9,767 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 869 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 146 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்களில் சின்னதச்சூர் கூட்டுறவு வங்கி ஊழியர், விழுப்புரம் ரெயில்வே ஊழியர், வெங்கமூர் அரசு பள்ளி ஆசிரியர், திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர், ரெட்டணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், வீடூர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள், கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் உள்ளிட்டோரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,876 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 111 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,029 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.