தொற்று இல்லாதவருக்கு கொரோனா உறுதி சான்று: தனியார் பரிசோதனை நிலையத்துக்கு ‘சீல்’ - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வடவள்ளியில் தொற்று இல்லாதவருக்கு கொரோனா உறுதி சான்று வழங்கிய தனியார் பரிசோதனை நிலையத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2020-09-25 09:45 GMT
கோவை,

கோவை வடவள்ளி பகுதியில் தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கோவில்மேட்டை சேர்ந்த மணிகண்டன்(வயது 27) என்பவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் அவருக்கு, கொரோனா தொற்று இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. எனினும் சந்தேகம் அடைந்த மணிகண்டன், கோவை அவினாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் பரிசோதனை நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவில் கொரோனோ தொற்று இல்லை என சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் வடவள்ளியில் உள்ள தனியார் பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்த பரிசோதனை நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அதனை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மக்களின் புகாரை அடுத்து அந்த தனியார் பரிசோதனை நிலையம் மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றனர்.

மேலும் செய்திகள்