நீலகிரி மாவட்ட விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விவரங்களை வாரந்தோறும் ‘ஷீடு’ செயலியில் பதிவேற்ற வேண்டும் - துணை இயக்குனர் அறிவுறுத்தல்

நீலகிரியில் விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விவரங்களை வாரந்தோறும் ‘ஷீடு’ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2020-09-25 08:45 GMT
ஊட்டி,

விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் ஊட்டியில் உள்ள தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமை தாங்கி விதை சட்டம், விதை கட்டுப்பாட்டு ஆணை போன்ற பொதுவான நடைமுறைகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள அனைத்து விதைகளின் ரகங்கள், விலை, இருப்பு போன்ற தகவல்களை அன்றாடம் தகவல் பலகையில் எழுதி தெரியும்படி வெளியே வைத்து இருக்க வேண்டும். இருப்பு பதிவேடு 3 ஆண்டுகளுக்கு ஆய்வுக்கு உட்பட்டது. விதைகளை ரகம் வாரியாகவும், குவியல் எண் வாரியாகவும் இருப்பு பதிவேட்டில் தனித்தனி பக்கங்களில் இருப்பு வைக்க வேண்டும்.

விதை இருப்பு உள்ள பக்கத்தின் முகப்பு பகுதியில் விதையின் பெயர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி நாள், கொள்கலன் அளவு, உற்பத்தியாளரின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும். விதை இருப்பு பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், விதை விற்பனை நிலையத்தில் உள்ள இருப்பிற்கும் வேறுபாடு இருக்கக்கூடாது.

விதை விற்பனை செய்யும்போது கட்டாயம் பீல் வழங்க வேண்டும். அதில் விதை விற்பனை உரிமம் எண், விதை விற்பனை நிலையத்தின் முகவரி, பட்டியல் எண், தேதி, விதை வாங்குபவரின் பெயர் மற்றும் முகவரி இருக்க வேண்டும்.

விதை இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை Seed App என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படும் அனைத்து விதை குவியல்களுக்கும் பணி விதை மாதிரிகளை அனுப்பி விதை பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே விதை விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விதை விற்பனையாளர்களுக்கான SP&CS என்ற மென்பொருளில் தனி உள்நுழைவு அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தேவையான அனைத்து விதை விற்பனை செயல் நடைமுறை வசதிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விதை விற்பனை நிலையம் பெயர் மற்றும் இடமாற்றம் செய்தல், விதை உரிமத்தில் திருத்தம் செய்தல், புதிய விதை உரிமம் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றி மென்பொருள் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டது.

விற்பனையாளர்கள் அனைவருக்கும் பணி விதை மாதிரிகள் பதிவேற்றம் செய்வது, பகுப்பாய்வு முடிவு அறிக்கைகளை விதை விற்பனை நிலையங்களில் பார்க்கவோ அல்லது பதிவிறக்கம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் அன்பழகி, விதை ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் விதை விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்