தொடர் மழையால் நீலகிரி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தொடர் மழையால் நீலகிரியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது.

Update: 2020-09-24 16:30 GMT
ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. தொடர்ந்து வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. தற்போது ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குறிப்பாக எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக காணப்பட்டது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து இருந்தது. ஆகஸ்டு மற்றும் நடப்பு மாதத்தில் தீவிரமாக கனமழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.

தொடர் மழையால் வனப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கால்வாய்களில் ஓடுகிறது. மலைச் சரிவுகளில் புதியதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. விவசாய விளை நிலங்களை ஒட்டியுள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் காட்சி அளிக்கிறது.

காமராஜ் சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 49 அடியில் 42 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணையில் 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் 170 அடிக்கு தண்ணீர் உள்ளது. 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணையில் 86 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதே போல் மற்ற அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பச்சை பசேலென காணப்படும் மலைகளுக்கு நடுவே அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் ஊட்டியில் நேற்று மழை பெய்யவில்லை. காலையில் இருந்தே வெயில் அடித்தது. இதற்கிடையே ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக இருந்ததால் பலத்த காற்று வீசியபோது, மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால் பணி நிமித்தமாக சென்றவர்கள் தோட்டத்தின் வழியாக நடந்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விழுந்த மரத்தின் அடியில் இருந்த குறுகிய இடைவெளியில் வாகனத்தை கொண்டு சென்று கடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை மின் வாள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-1, நடுவட்டம்-3, குந்தா-1, அவலாஞ்சி-12, எமரால்டு-3, அப்பர்பவானி-11, பந்தலூர்-8 உள்பட மொத்தம் 76 மழை பதிவாகியது.

இதன் சராசரி 2.62 ஆகும்.

மேலும் செய்திகள்