சின்னசேலம் அருகே நள்ளிரவில் பரபரப்பு: வீடு புகுந்து பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு - தடுக்க முயன்ற கணவரை கொள்ளையர்கள் உருட்டு கட்டையால் தாக்கிய கொடூரம்

சின்னசேலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறித்ததை தடுக்க முயன்ற கணவரை கொள்ளையர்கள் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-09-24 15:15 GMT
சின்னசேலம்,

புதுச்சேரியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் பிரபாகரன்(வயது 38). தற்போது இவர் சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட எலியத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தபடி பாதரம்பள்ளம் கிராமத்தில் தனியார் மருந்து கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(27). இவர்களுக்கு பிரவீனா ஸ்ரீ என்ற ஒருவயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் இயற்கை உபாதைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டின் கதவை திறந்து கொண்டு எதிரே உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது மர்ம மனிதன் ஒருவன் வீட்டின் உள்ளே சென்று கதவின் பின்புறமாக மறைந்து நின்றான்.

கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்த சசிகலா கதவை மூட முயன்றார். அப்போது கதவின் பின்னால் மறைந்து நின்ற மர்ம மனிதன் திடீரென சசிகலாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றான். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் தங்க சங்கிலியை கைகளால் இறுக பிடித்துக்கொண்டு கூச்சல் எழுப்பினார்.

இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் படுக்கையில் இருந்து எழுந்து ஓடோடி வந்தார். அதற்குள் தங்க சங்கிலி அறுந்து 2 பவுன் தாலி சசிகலாவின் கையிலும், 4 பவுன் சங்கிலி மர்ம மனிதனின் கையிலும் இருந்தது. பிரபாகரனை பார்த்த மர்ம மனிதன் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினான். அவனை பின்னால் துரத்தி சென்று குடிநீர் தொட்டி அருகில் வைத்து பிரபாகரன் கைகளால் இறுகபிடித்துக்கொண்டார்.

இதைப்பார்த்து அங்கே மறைந்திருந்த மேலும் 3 மர்மநபர்கள் ஓடோடி வந்து உருட்டு கட்டையால் பிரபாகரனை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது பிடியில் இருந்த மர்ம மனிதனை விடுவித்து அங்கிருந்து அனைவரும் தங்கசங்கிலியுடன் தப்பி சென்றனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தினர் பிரபாகரன் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அதே பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் தெரியவந்தது. சசிகலாவிடம் தங்க சங்கிலியை பறிப்பதற்கு முன்னதாக 3 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நேரத்தில் தான் இயற்கை உபாதைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சசிகலாவிடம் கொள்ளையர்கள் தங்க சங்கிலியை போராடி பறித்து சென்றது தெரியவந்துள்ளது. பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எலியத்தூர் கிராமத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு பிரபாகரனின் மனைவி சசிகலாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கொள்ளையர்கள் தப்பி சென்ற பாதையை அவர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் கூறும்போது, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவோம் என்றார். பின்னர் கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு ஏட்டு பாலசுப்பிரமணியன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறித்ததை தடுக்க முயன்ற கணவரை கொள்ளையர்கள் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் சின்னசேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்