வேலூர் கோட்டைக்குள் நடைபயிற்சிக்கு அனுமதிக்கக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
வேலூர் கோட்டைக்குள் நடைபயிற்சிக்கு அனுமதிக்கக்கோரி திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றார்கள்.;
வேலூர்,
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், பூங்கா, அருட்காட்சியகம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிகவளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
அதன்படி, மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் வேலூர் கோட்டையும் மூடப்பட்டது. மேலும் கோட்டை சுற்றுச்சுவர் நடைபாதைக்கு செல்லும் வாயில்களின் இரும்பு கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டன.
கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், காவலர் பயிற்சி பள்ளி, அருங்காட்சியகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள், கோவில் ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் இன்றி கோட்டை வெறிச்சோடி காணப்பட்டது.
மத்திய அரசு கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளித்தது. அதனால் கடந்த 1-ந்தேதி முதல் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு செல்லும் பாதையை தவிர மற்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று விடாதபடி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. கோட்டைக்குள் நடைபயிற்சிக்காக காலை மற்றும் மாலை வேளையில் செல்லும் நபர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டைக்குள் நடைபயிற்சிக்காக காந்தி சிலை அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கோட்டைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை தொல்லியல்துறை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் “தமிழகத்தில் உள்ள பூங்கா, சுற்றுலாதலங்கள் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் கோட்டைக்குள் நடைபயிற்சிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் எங்களை அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். அதற்கு இன்ஸ்பெக்டர், இதுகுறித்து கலெக்டர், தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.