வாழை மரங்களை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம்

பேத்துப்பாறை பகுதியில் வாழை மரங்களை சேதப்படுத்தி ஒற்றை காட்டுயானை அட்டகாசம்.

Update: 2020-09-24 03:46 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஒற்றை காட்டுயானை அந்த கிராமங்களுக்குள் இரவில் சுற்றித்திரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த காட்டுயானை பேத்துப்பாறை கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரத்தில் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளதாகவும், அது குடியிருப்பு பகுதிக்குள் நிரந்தரமாக வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்