புதுக்கோட்டை துணை சூப்பிரண்டு, திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் பெயர்களில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி

புதுக்கோட்டை போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update: 2020-09-24 02:36 GMT
திருச்சி,

சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனும் முகநூலை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும், அரசுத்துறை அதிகாரிகளும், போலீசாரும் முகநூலில் தங்களது பெயரில் கணக்கு தொடங்கி பராமரித்து வருகின்றனர். இதன் மூலம் நட்பு கிடைப்பதும், பழைய நண்பர்கள் ஒன்று சேருவதும், தங்களது மகிழ்ச்சி, துக்கங்களையும், பிற தகவல்களையும் பகிரக்கூடிய சமூகவலைத்தளமாக முகநூல் உள்ளது.

இதனை நல்லவிதமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இதில் போலி கணக்கு தொடங்கி பணம் பறித்தல், பெண்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட மோசடி வேலைகளையும் சிலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் செந்தில்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றது. அவரது புகைப்படத்தை வைத்து, பெயரை குறிப்பிட்டு பலருக்கு நண்பராக வலைவிரித்தனர்.

ஒடிசா கும்பல்

போலீஸ் அதிகாரி செந்தில்குமாரின் நட்பை ஏற்ற நண்பர்களுக்கு மெசேஞ்சர் மூலம் தனக்கு அவசரமாக ரூ.30 ஆயிரம் வேண்டும் எனவும், அதனை கூகுள்பே-ல் செலுத்துமாறும், அதற்கான செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அனுப்பி உள்ளனர். இதனை கண்ட சில உண்மையான நண்பர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.

அப்போது தான் எதுவும் கேட்கவில்லை எனக்கூறியிருக்கிறார். அதன்பிறகு விசாரித்ததில் தனது பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்க ஒரு கும்பல் முயன்றதை அறிந்தார். உடனடியாக இதுபற்றி திருச்சியில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அந்த போலி முகநூல் கணக்கு உடனடியாக முடக்கப்பட்டது. இதுபற்றி திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிப்பதற்கான முயற்சிகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர்

மேலும் இதேபோன்று திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி ரவிக்குமாரும் திருச்சி சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில் துணை போலீஸ் சூப்பிரண்டுசெந்தில்குமார் தனது பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்ய முயற்சி நடந்து இருப்பதால் யாராவது, தான் கேட்பதுபோல் தகவல் அனுப்பினால் ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீஸ் அதிகாரிகளின் பெயரிலேயே போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்