கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார தூதுவர்களாக செயல்பட வேண்டும் - கலெக்டர் மெகராஜ் பேச்சு
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார தூதுவர்களாக செயல்பட வேண்டும் என கலெக்டர் மெகராஜ் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலாக அதிகரித்து வருகின்றது. இப்பகுதிகளில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிகளில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்தப்்பட்டு உள்ளது.
நாமக்கல் நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்திட வேண்டும். வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
பொது மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவினை உட்கொள்ள வேண்டும். அரசுத்துறை களப்பணியாளர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காய்ச்சல் அறிகுறி கண்டவர்கள் குறித்து தெரியவந்தால் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தி சுகாதார தூதுவர்களாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 வார காலமாக கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராம புறங்களை விட நகர் பகுதிகளில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவிற்கான மருந்து அவசியம் இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை குறைத்து கொள்வதே ஆகும்.
நமது மாவட்டத்தில் காவல்துறையை சேர்ந்த 1400 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 72 போலீசாருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 60 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். வருவாய்த்துறையை சேர்ந்த 1,000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் கடந்த 15 நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 பேர் வீதம் சுமார் 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனிவரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நகராட்சி தோறும் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், உதவி கலெக்டர் கோட்டைக்குமார், நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், என்ஜினீயர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் சுகவனம், தாசில்தார் பச்சைமுத்து உள்பட டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.