பெங்களூரு குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் கைது கேரளாவில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்

பெங்களூரு குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் கேரளாவில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்.

Update: 2020-09-21 22:31 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த 2008-ம் ஆண்டு மடிவாளா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், பயங்கரவாத ஒழிப்பு படையினரும் ஏராளமான பயங்கரவாதிகளை கைது செய்திருந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட சோயப் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், பயங்கரவாத ஒழிப்பு படையினரும் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சோயப், கேரளாவில் பதுங்கி இருப்பது பற்றி குற்றப்பிரிவு போலீசாருக்கும், பயங்கரவாத ஒழிப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் கேரளாவுக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது, கேரளாவில் பதுங்கி இருந்த சோயப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவரை கேரளாவில் கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகு மற்ற விவரம் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்