தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் 3 நாட்களுக்கு பிறகு உடல், உறவினர்களிடம் ஒப்படைப்பு

தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கு தொடர்பாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 3 நாட்களுக்கு பிறகு செல்வனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-09-21 23:30 GMT
தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ந்தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வனுக்கும், பக்கத்து ஊரான உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி செயலாளருமான திருமணவேலுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே, கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் சொக்கன்குடியிருப்பு கிறிஸ்தவ ஆலயம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் செல்வனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. நிர்வாகிகளுடன் சேர்ந்து, அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றார். கோரிக்கையை வலியுறுத்தி இரவு முழுவதும் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு 4-வது நாளாக போராட்டம் நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்வின் ஜெகதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீதான புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அனுப்பினார்கள்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து, நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேற்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் சொக்கன்குடியிருப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் மண்டபத்துக்கு சென்று, செல்வனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வும் உடன் இருந்தார்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், “செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்வனின் மனைவி ஜீவிதாவுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவருக்கு நிவாரண உதவி வழங்கவும் பரிந்துரைக்கப்படும்“ என்று தெரிவித்தனர்.

இதனை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாகவும், செல்வனின் உடலை பெற்றுச் சென்று இறுதிச்சடங்கு செய்யவும் குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து 4 நாட்களாக நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து மாலை 5.10 மணி அளவில் செல்வனின் அண்ணன் மரியதாஸ் மற்றும் உறவினர்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு கடந்த 3 நாட்களாக பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த செல்வனின் உடல், உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி, சொந்த ஊரான சொக்கன்குடியிருப்புக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்