பங்களாப்புதூர் அருகே 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்

பங்களாப்புதூர் அருகே செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-09-21 00:15 GMT
டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பரிசல் துறை வீதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 55). கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி சகுந்தலா. இவர்களது மகள் ஹேமா மாலினி (14). இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வேலுமணியும், சகுந்தலாவும் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டனர். ஹேமா மாலினி மட்டும் வீட்டில் இருந்தார்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கரும் புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனே இதுபற்றி வேலுமணிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் பதறியபடி உடனே வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சமையல் அறையில் ஹேமா மாலினி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

உடனே இதுபற்றி வேலுமணி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். ‘கடந்த வாரம் ஆன்லைன் வகுப்புக்காக ஹேமா மாலினிக்கு வேலுமணி செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால் ஹேமா மாலினி செல்போனில் அடிக்கடி பாட்டு கேட்டு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஹேமா மாலினி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்