கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி பகுதியில் தாய், மகள் உள்பட 13 பேருக்கு கொரோனா

கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி பகுதியில் தாய், மகள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update:2020-09-21 04:00 IST
ஈரோடு,

கொடுமுடியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கொடுமுடி காங்கேயம் சாலையில் உள்ள ரோஜா நகரில் 51 வயதுடைய பெண்ணுக்கும், அவரது 22 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

இதேபோல் கொடுமுடி அருகே உள்ள தெற்கு மூர்த்தியாபாளையத்தைச் சேர்ந்த 51 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. இவர்கள் 3 பேரும் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஊஞ்சலூரில் கடந்த 18-ந் தேதி அரசு அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து ஊஞ்சலூர் பகுதியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்ததில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கும், கரூர் மெயின் ரோட்டில் வசிக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் உத்தரவின்படி, கொம்பனைப் புதூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர் பூரண சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தொற்று பாதித்த செல்லாண்டியம்மன் கோவில் தெருவுக்கு நேற்று சென்றனர். பின்னர் அந்த தெரு முழுவதையும் தனிமைப்படுத்தினர். கொரோனா தொற்று பாதித்த 9 பேரும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிவகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த ஒருவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சிவகிரி நெசவாளர் காலனி, பாலமேடு புதூர் ஆகிய பகுதிகளில் சிவகிரி பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்