பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சுற்றி அகழி யானை புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை

பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ளது. யானை புகுவதை தடுக்க வனத்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2020-09-20 22:15 GMT
பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை நாசப்படுத்துகின்றன. தடுக்க வரும் விவசாயிகளையும் சில நேரம் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

மேலும் பவானிசாகர் நகர் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களிலும் யானைகள் புகுந்து சுவர்களை இடித்து சேதப்படுத்துகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பவானிசாகர் நகர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தின.

இதனால் அச்சமடைந்த பொதுப்பணித்துறையினர் இடிந்த சுற்றுச்சுவர் பகுதியில் கட்டிடத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து யானைகள் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் அலுவலகத்தைச் சுற்றிலும் 200 மீட்டர் தூரத்துக்கு 4 அடி அகலம், 5 அடி ஆழத்துக்கு அகழி வெட்டி உள்ளனர். காட்டுயானைகள் இந்த அகழியை தாண்டி பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுச்சுவர் பகுதிக்கு வராத வண்ணம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்