கோவையில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது - ஒரேநாளில் 565 பேருக்கு தொற்று உறுதி
கோவையில் நேற்று ஒரே நாளில் 565 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
கோவை,
கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சுங்கம் பணிமனையை சேர்ந்த 49 வயது பெண், 32, 53, 56 வயது ஆண்கள், அரசு மருத்துவமனையை சேர்ந்த 23 வயது ஆண் பயிற்சி டாக்டர், 46 வயது பெண் மருத்துவப் பணியாளர், வெள்ளக்கிணர் ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பை சேர்ந்த 39 வயது ஆண், 9 வயது சிறுவன், போத்தனுர், உப்பிலிப்பாளையம், மற்றும் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்புகளை சேர்ந்த 48, 49, 56 வயது ஆண்கள், சித்தாபுதுர் வருமானவரி அலுவலர்கள் குடியிருப்பை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர கணபதியில் 24 பேர், பொள்ளாச்சியில் 20 பேர், மேட்டுப்பாளையத்தில் 14 பேர், சவுரிபாளையம், சிங்காநல்லூரில் தலா 9 பேர், அன்னூரில் 8 பேர், குனியமுத்தூர், காரமடையில் தலா 6 பேர் உள்பட 565 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 25 வயது வாலிபர், 55 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 53 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 73 வயது முதியவர் ஆகிய 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களோடு சேர்த்து கோவையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 376 ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார் 306 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். கோவையில் தற்போது 4, 288 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 20, 680 பேர் குணமடைந்து உள்ளனர்.