காவிரியில் இருந்து பாலாறுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் - தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் பேட்டி

காவிரியில் இருந்து பாலாறுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் திட்டமாக செயல்படுத்தப்படும் எனப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-20 12:30 GMT
வாணியம்பாடி,

தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாணியம்பாடி நியூ டவுன் சர்வீஸ் ரோடு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் மாவட்ட பொறுப்பாளர் தேவராஜி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்தும், பூங்கொத்துக் கொடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கு துரைமுருகன் பேசுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நான் இன்று தி.மு.க.வின் மிகப்பெரிய பொறுப்பான பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்துள்ளேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் 3 தலைவர்கள் வகித்து வந்த இப்பெரிய பொறுப்புக்கு நான் வந்துள்ளேன். இந்தப் பதவியில் விறுப்பு, வெறுப்பு இல்லாமல் பணியாற்றுவேன். நானும், தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றுவோம். விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிப் பெற்று ஆட்சியை அமைக்கும். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க.வே கைப்பற்றும், என்றார்.

முன்னதாக மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு துரைமுருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

இந்த மாவட்டத்தில் பாதிப்புள்ள பெரிய பிரச்சினை பாலாறு. இதில் உள்ள பிரச்சினையின் ஆழம் தெரியாமல் பலர் பேசி கொண்டு இருக்கிறார்கள். பேத்தமங்கலம் ஏரி திறந்தால் தான் நமக்கு தண்ணீர் என்பது அல்ல. காவிரி-குண்டாறு இணைப்பு ஒன்று உள்ளது. காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் 189 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டினேன். அத்துடன் எங்கள் ஆட்சி முடிந்தது.

இந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக அங்கிருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இப்போது தான் தண்ணீரை எடுத்துச் செல்வது எப்படி? என்று தீர்மானிக்க கமிட்டி போட்டுள்ளார்கள். அதற்குள் அவர்கள் எதிர்க்கட்சி ஆகி விடுவார்கள். அதை, நாங்கள் வந்து செய்யப்போகிறோம்.

அதேபோல் சாத்தனூர் அணையின் மிகை நீரை செய்யாற்றில் கலக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் காவிரியில் மிகை ஆக தண்ணீர் ஓடும் காலத்தில் பாலாற்றில் விட்டு 10 தடுப்பணைகள் கட்டினால் தண்ணீர் தேங்கி நிற்கும். இந்தத் திட்டத்தை நான் இருக்கும்போதே செய்தேன். பிறகு ஆட்சி முடிந்து போய் விட்டது.

இந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் திட்டமாக காவிரியில் இருக்கும் மிகை நீரை கொண்டு வந்து பாலாற்றில் விட்டு, அணைகளை கட்டி தண்ணீரை தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்த செய்வேன். 2021-ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் சத்தியமாக, நிச்சயமாக தி.மு.க. தான் ஆளும் கட்சியாக ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), மாவட்ட அவைத் தலைவர் முனிவேல், மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் பிரபாகரன், வேலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் அசோகன், பேரூராட்சி செயலாளர்கள் செல்வராஜ், ஸ்ரீதர், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நகர, ஒன்றிய, பேரூர், மகளிர், மாணவரணி, இளைஞரணியைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்