மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது - நாராயணசாமி திட்டவட்டம்

புதுவையில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

Update: 2020-09-19 23:40 GMT
புதுச்சேரி,

புதுவையில் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் குறையாமல் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். முன்பு தொற்று பாதிப்பு 31 சதவீதம் இருந்தது. ஆனால் தற்போது 7 முதல் 9 சதவீதம் வரைதான் உள்ளது. தொற்று பாதிப்பானது குறைந்து வருகிறது. அதேபோல் இறப்பு விகிதத்தையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சிலர் சளி, காய்ச்சல் என்று கூறி சாதாரணமாக இருந்துவிட்டு வீட்டிலேயே மருந்து மாத்திரை எடுத்து வருகின்றனர். மூச்சுத் திணறல் ஏற்படும்போதுதான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அதனால் அவர்களை காப்பாற்றுவது சிரமமாகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்.

சர்க்கரை நோய், இதயநோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை அதிக அளவில் தொற்று பாதிக்கிறது. தொற்று கண்டறிவதில் மக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. இப்போது வீடுவீடாக சென்று பரிசோதனைகள் நடக்கிறது. ஆனால் பொதுமக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. வீட்டைவிட்டு வெளியே வரவே மறுக்கிறார்கள்.

கொரோனா தடுப்பு, சிகிச்சை அளிப்பதில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் இடையே ஒத்துழைப்பு தொடர்பாக நாளை இருதரப்பு நிர்வாகங்களையும் அழைத்துப் பேச உள்ளோம். கொரோனா தொற்று அறிகுறியுடன் வருபவர்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால் தனியார் கிளினிக்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. வெளிநாடுகளில் கடுமையான சட்டங்களை போட்டு அதை நடைமுறைப்படுத்துகிறார்கள். நாம் ஜனநாயக நாடு என்பதால் அறிவுரை கூறுகிறோம்.

கிராமப்புறங்களில் தொற்று பாதிப்பு குறித்து அறிய துணை சுகாதார நிலையங்களில்கூட எக்ஸ்ரே மெஷின் வைக்க கூறியுள்ளோம். திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தொற்று அதிகமாக பரவுகிறது. அங்கு யாரும் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. திருமண மண்டபங்களுக்கு சீல் வைத்தால்தான் திருந்துவார்கள்போல் உள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர்தான் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளோம். ஆனால் 3 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

புதுவையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. சாதாரண படுக்கைகள் 2 ஆயிரத்து 463-ல் 975 காலியாக உள்ளது. ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 958-ல் 398 காலியாக உள்ளது. அதேபோல் வெண்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் 132-ல் 43 காலியாக உள்ளது.

கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தையும் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்ற உள்ளோம். அகில இந்திய அளவில் குணமடைவோர் விகிதம் 72 ஆக உள்ளது. நமது மாநிலத்தில் அது 75 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவன அதிகாரி சவுமியா சாமிநாதனிடம் அடுத்தவாரம் ஆலோசனை பெற உள்ளோம்.

மருத்துவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவர்னரின் ஒத்துழைப்புடன் புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். இருந்தபோதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது.

புதுவையில் மட்டுமே சரியான புள்ளிவிவரங்களை தருகிறோம். கொரோனா பணிகளுக்கு செலவு அதிகமாகி வருகிறது. எனவே தொழில் அதிபர்கள், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அதிக அளவில் நிதி தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்