தண்டவாளங்களை கடந்து செல்ல தடை: ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை குறித்து ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

Update: 2020-09-19 22:15 GMT
ஈரோடு,

ரெயில் தண்டவாளங் களை பொதுமக்கள் நடந்து கடந்து செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி பலரும் கவனக்குறைவாக தண்டவாளங்களை கடந்து, நடந்து சென்று வருகிறார்கள். இதனால் எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ரெயில்கள் ஓடவில்லை.

அவ்வப்போது சரக்கு ரெயில்களும், ஒரு சில சிறப்பு ரெயில்களும் மட்டுமே இயக்கப்பட்டன. கடந்த 1-ந்தேதி முதல் குறிப்பிட்ட வழித்தட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பழைய கால அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் சாதாரணமாக ரெயில் தண்டவாளங்களை கடப்பதை தடுக்க ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று சாஸ்திரி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து ரெயில் தண்டவாளங்களை கடப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து எடுத்துக் கூறி பிரசாரம் செய்தனர்.

மேலும் செய்திகள்