திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 187 பேருக்கு கொரோனா - 31 பேர் குணமடைந்தனர்; 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர்குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகியுள்ளனர்.;

Update: 2020-09-19 06:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 727 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாகவே பாதிப்புஎண்ணிக்கை 200-ஐநெருங்கிவந்துகொண்டிருக்கிறது. இது பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது போக்குவரத்துக்கு தளர்வு விதிக்கப்பட்டதில் இருந்து திருப்பூருக்கு நாளுக்கு நாள் வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கையும், வெளியூர்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும்போது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியிருக்கிறது. வரும் காலங்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 31 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருப்பூரைச் சேர்ந்த 54 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபோல் திருப்பூரைச் சேர்ந்த 72 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்