அறந்தாங்கி வனத்தோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை; ரூ.50 ஆயிரம்-முக்கிய ஆவணங்கள் சிக்கின
அறந்தாங்கி வனத்தோட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.50 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.;
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் தமிழ்நாடு வனத்தோட்ட மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணி அளவில் திடீரென்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், தமிழரசி ஆகியோர் கொண்ட குழுவினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு சோதனை நடத்தினர். அப்போது, வெளிநபர்கள் யாரையும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே இருந்த நபர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை முடிந்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சோதனையின் போது, அறந்தாங்கி வனத்தோட்டக் கண்காணிப்பாளர் வள்ளிகண்னுவிடம் இருந்த கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு 04322-22355 செல்: 94981 57799 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.