மாவட்டத்தில் 2 மாதங்களாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உதவித்தொகை நிறுத்தம் - கட்டுமான பணிகளை செய்ய முடியாமல் பயனாளிகள் அவதி

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகளை செய்ய முடியாமல் பயனாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2020-09-18 22:00 GMT
சேலம், 

தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் ரூ.6 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயிகள் போர்வையில் உதவித்தொகை பெற்ற நபர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் மற்றொரு திட்டமான பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் வீடு இல்லாத நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட விரும்பினால் மத்திய அரசின் பங்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் உதவித்தொகை தவணை முறையில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நிலத்தின் பத்திரங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அதற்கான உதவித்தொகை விசாரணை நடத்தி தவணை முறையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள நபர்கள் வீடுகளின் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், போதிய நிதி பற்றாக்குறையை காரணமாகவும் உதவித்தொகை யாருக்கும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு செய்தவுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நிதி உதவி செலுத்தப்படும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை காரணமாகவே உதவித்தொகை வழங்க முடியாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் பயனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

மேலும் செய்திகள்