நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் அருகே நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்,
நாமக்கல்லை அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை (வயது 43). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், கென்னடி என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சர்சைக்குரிய இடத்தில் கென்னடி கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், கென்னடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அழகுமலை மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (36) ஆகியோர் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து கொண்டு வந்த கேனில் இருந்து பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் தம்பதியிடம் இருந்து கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து நல்லிபாளையம் போலீசார் கணவன், மனைவி 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.