காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் அமைய உள்ள மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி - பிரதமர் மோடியிடம் எடியூரப்பா நேரில் கோரிக்கை

ரூ.9 ஆயிரம் கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைய உள்ள மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-09-18 23:45 GMT
பெங்களூரு,

கர்நாடகம்- தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.

இதைதொடர்ந்து காவிரி நீரை பங்கிட்டு கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு ஆண்டுக்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகத்தில் பெய்த கனமழையால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம்- கர்நாடகம் இடையே சுமுகமான உறவு நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் கர்நாடகம்-தமிழக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது.

ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த புதிய அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணை 67.16 டி.எம்.சி. நீர் சேமித்து வைக்கும் வகையில் கட்டப்பட உள்ளது. அத்துடன் இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர், பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. அத்துடன் அணையின் நீரை பயன்படுத்தி 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய அணையால் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 63 சதவீதம் வனம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். அதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் கர்நாடகம் வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரி சபை குறித்து மேலிட தலைவர்களுடன் விவாதிக்கவும், கர்நாடகத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள நிதி வழங்க வலியுறுத்தியும் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் மாலை அவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது மத்திய நிதி மந்திரியிடம், கர்நாடகத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 14-வது நிதி கமிஷன் பரிந்துரை படி கர்நாடகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5,495 கோடி ஒதுக்க எடியூரப்பா வலியுறுத்தினார். பின்னர் இரவில் அவர் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் தங்கினார்.

நேற்று காலை கர்நாடக பவன் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் எடியூரப்பா கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது மேகதாது உள்பட பல்வேறு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இரு தலைவர்களின் இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது. மேலும் எடியூரப்பா, மழை-வெள்ள நிவாரண நிதி, மேகதாது திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

கர்நாடகத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டு அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும் வகையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளில் இந்த ஆண்டே தகுந்த திருத்தங்களை செய்ய வேண்டும். 3-வது கட்ட கிருஷ்ணா மேல் அணை திட்டம் மற்றும் பத்ரா மேல் அணை திட்டங்களை தேசிய திட்டங்களாக அறிவிக்க வேண்டும்.

குடிநீர் திட்டத்திற்காக புதிய அணை கட்டப்படும் மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கும் விரைந்து செயல்பட்டு அனைத்து விதமான அனுமதிகளையும் வழங்க வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிப்பு மிகுந்த நீரை பயன்படுத்த முடியும். வருகிற நவம்பர் 19-ந் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை நீங்கள் (பிரதமர் மோடி) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ஜல்சக்திதுறை மந்திரி கஜேந்திர ஷெகாவத் உள்ளிட்டோரையும் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

அப்போது, மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

டெல்லி சென்றுள்ள எடியூரப்பா பல்வேறு துறைகளின் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கர்நாடக திட்டங்கள் குறித்தும், அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவும் அவர் நேரில் கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்