ரூ.25 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக எடியூரப்பாவுக்கு பிச்சை பாத்திரம் வழங்கிய மத்திய அரசு - சித்தராமையா கடும் தாக்கு

ரூ.25 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக எடியூரப்பாவுக்கு மத்திய அரசு பிச்சை பாத்திரம் வழங்கியுள்ளது என்று சித்தராமையா கடுமையாக தாக்கியுள்ளார்.

Update: 2020-09-18 22:50 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.1,869 கோடி மட்டுமே நிதி வழங்கியது. இந்த முறை ஏற்பட்ட வெள்ளத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரை சந்திக்கும்போது, கடந்த ஆண்டு இழப்புடன் இந்த ஆண்டு சேத மதிப்பீட்டையும் சேர்த்து வழங்குமாறு எடியூரப்பா கேட்க வேண்டும். 15-வது நிதி குழு பரிந்துரைப்படி மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்திற்கு அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி இழப்பை சரிசெய்ய எடியூரப்பா முயற்சி செய்ய வேண்டும்.

கொரோனா பரவலில் உலகில் இந்தியா 2-வது இடத்திலும், நாட்டில் கர்நாடகம் 4-வது இடத்திலும் உள்ளது. வெற்றி கிடைக்கும்போது தன்வசப்படுத்தி கொள்ளும் மோடி, தோல்வி ஏற்படும்போது அதை மாநிலங்களின் மீது போட்டுவிடும் பழக்கம் வைத்துள்ளார். கொரோனா தடுப்பு உபகரணங்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. இதில் கர்நாடகத்தின் தேவையில் 10 சதவீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை.

செயற்கை சுவாச கருவி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் மரணம் அடைகிறார்கள். இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறி அந்த பற்றாக்குறையை சரிசெய்ய எடியூரப்பா முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ரூ.20 லட்சம் கோடி தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது. அது இன்னும் கர்நாடகத்தை வந்து சேரவில்லை.

வேலை வாய்ப்பின்மை மற்றும் பசியால் மக்கள் சாவதற்கு முன்பு மத்திய அரசு அறிவித்த நிதி உதவியை கர்நாடகத்திற்கு கொண்டுவர எடியூரப்பா முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பு ரூ.25 ஆயிரம் கோடி வழங்குவதற்கு பதிலாக எடியூரப்பாவுக்கு மத்திய அரசு பிச்சை பாத்திரம் வழங்கியுள்ளது. கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை சரிசெய்யுமாறு பிரதமரிடம் தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்