கைவினை கலைஞர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த கடன் உதவி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கைவினை கலைஞர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கடன் உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

Update: 2020-09-18 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் ‘வீர்சாட்” என்ற கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும் இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் 90 சதவீதம் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம், 5 சதவீதம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மீதமுள்ள 5 சதவீதம் விண்ணப்பதாரரின் தொகையும் அடங்கும். கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் கடன்பெற விரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்