விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - கள்ளக்குறிச்சியில் 103 பேருக்கு தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர். கள்ளக்குறிச்சியில் மேலும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-09-18 12:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 9,856 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 86 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 8,889 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 881 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணும், மேல்மலையனூரை சேர்ந்த 62 வயதுடைய முதியவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மயிலத்தை சேர்ந்த 45 வயதுடைய விவசாயியும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்களுடைய இறப்பு விவரம் நேற்று விழுப்புரம் மாவட்ட இறந்தவர்களின் பட்டியலோடு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 125 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,981 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 143 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,021 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 8,308 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 7,166 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 103 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,411 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்