திருவண்ணாமலையில், ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி- இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலையில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அருங்காட்சியகத்துறை இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-09-18 10:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் பகுதியில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறை சார்பில் ரூ.1 கோடியில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் சமூக, பொருளாதார, அரசியல், கலை, அறிவியல் உள்பட ஏழு விதமான வரலாறுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் இங்கு மாவட்டத்தின் பாரம்பரியமான பொருட்கள் காலவரிசைப்படி காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அருங்காட்சியகத்துறை இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மந்தாகினி, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதாபேகம், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், தாசில்தார் அமுல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

பின்னர் அருங்காட்சியகத்துறை இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட அரசு அருங்காட்சியக பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் எந்த மாதிரியான பொருட்கள் காட்சிப்படுத்துவது குறித்தும், கொரோனா காலத்திற்கு பிறகு பார்வையிட வருகை தரும் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொருட்கள் மற்றும் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் 2 அல்லது 3 வாரங்களில் முடிக்கப்படும். திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் சிறப்பு பொருட்கள் காட்சிப்படுத்துவதும், தகவல்கள் பரிமாற்றம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப்படுகிறது.

மேலும் அருங்காட்சியகம் அமைந்துள்ள வளாகத்தில் பெரிய சின்னமும் நிறுவப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம் தமிழகத்தில் ஒரு முன்மாதிரியான அருங்காட்சியகமாக அமையவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு அருங்காட்சியக இயக்குனர் தலைமையில், கலெக்டர் முன்னிலையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட அரசு அருங்காட்சியகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவையும் அருங்காட்சியகத்துறை இயக்குனர் எம்.எஸ்.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, ஒன்றிய பொறியாளர் அருணா உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்