அதிக வட்டி தருவதாக பல கோடி சுருட்டல்: மோசடி ஆசாமியின் அலுவலகத்தில் கேரள போலீஸ் சோதனை - ஆவணங்களை கைப்பற்றினர்

பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதானவரின் அலுவலகத்தில் கேரள போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-18 10:15 GMT
கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவர் பீளமேடு பகுதியில் “யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்“என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் கிளை நிறுவனங்களை தமிழகத்தில் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் நடத்தி வந்தார். இவர் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கிடைக்கும்‘ என்று ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி இவரது நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கடந்த ஆண்டு இவர் தலைமறைவான நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள இவரின் நிறுவனத்தை முதலீடு செய்த மக்கள் முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் சுருட்டிய விவகாரம் குறித்து கோவை பொருளாதார காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய கவுதமை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கேரளாவிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து கேரள காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவுதமை கடந்த 12-ந் தேதி தனிப்படை போலீசார் சேலத்தில் கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்த கேரள போலீஸ் துணை சூப்பிரண்டு சியாம் தலைமையில் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கைதான கவுதமை கோவைக்கு அழைத்து வந்து பீளமேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், முத்திரைகள், கோப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை ஆகியவற்றை கைபற்றி கவுதமை கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது, ஏற்கனவே நாங்களும் கவுதமின் அலுவலகத்தில் சோதனை நடத்தினோம். அப்போது ரூ.1000 கோடிக்கு மேல் வரவு-செலவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெறப்பட்டது. ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து கவுதமிடம் தேவைப்பட்டால் நாங்களும் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்