எம்.எல்.ஏ. விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியர் தீயணைப்பு வீரர்கள் வலை விரித்து பிடித்தனர்

எம்.எல்.ஏ. விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை தீயணைப்பு படை வீரர்கள் வலை விரித்து பிடித்தனர்.

Update: 2020-09-17 22:42 GMT
மும்பை,

மராட்டிய மாநில தலைமை செயலகமான மந்திராலயா அருகே ஆகாஷ்வானி என்ற எம்.எல்.ஏ. விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு 38 வயதுடைய ஒருவர் வந்தார்.

விடுதியின் 4-வது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்த சுவர் மீது ஏறி நின்று தான் தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மெரின்டிரைவ் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது.

போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரும்படி தெரிவித்தனர். இதற்கு அவர் பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்த முயன்றனர். போலீசாரின் பேச்சுக்கு அவர் காதுகொடுக்க மறுத்தார். தான் தற்கொலை செய்யப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்தப்படி அங்கேயே நின்றிருந்தார்.

ஒருகட்டத்தில் அவர் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இருப்பினும் அவர் விழுந்தால் பிடிக்க கீழே வலைவிரித்து காத்திருந்த தீயணைப்பு படையினர், அவரை லாவகமாக வலையில் பிடித்து கொண்டனர். இதன்மூலம் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை மிரட்டல் விடுத்து கீழே குதித்தவர் ஜல்னா மாவட்டம் பட்னேபூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்