புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் அமைப்பது தொடர்பாக தென்காசியில் வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு - 10 இடங்களை பார்வையிட்டார்

புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் அமைப்பது தொடர்பாக தென்காசியில் வருவாய் நிர்வாக ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக 10 இடங்களை அவர் பார்வையிட்டார்.

Update: 2020-09-17 22:30 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி நகரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உதயமானது. புதிய மாவட்டத்திற்கான மாவட்ட கலெக்டர் அலுவலகம் தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடத்திற்காக ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரப்பேரிக்கு பொதுமக்கள் எளிதில் செல்ல முடியாது என்றும் அந்தப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வேறு இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் எங்கு அமைக்கலாம் என ஆய்வு செய்தார். முதலில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட ஆயிரப்பேரிக்கு சென்றார். அங்கு அரசுக்கு சொந்தமான விதைப்பண்ணை இருந்த இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகம், இலத்தூர், கொடிக்குறிச்சி, பச்சை நாயக்கன் பொத்தை, பாட்டா குறிச்சி உள்பட 10 இடங்களை அவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் வந்திருந்த தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளனிடம் ஒவ்வொரு இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அந்த இடங்களில் போக்குவரத்துக்கு என்னென்ன வசதிகள் உள்ளது? அரசுக்கு சொந்தமான இடம் எவ்வளவு உள்ளது? மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு போதுமான இடம் உள்ளதா? என்பது குறித்து கேட்டு தெரிந்து கொண்டார். அதிகாரிகள் அவரிடம் வரைபடத்துடன் அவற்றிற்கான விளக்கங்களை கொடுத்தனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரகத நாதன், தென்காசி உதவி கலெக்டர் (பொறுப்பு) கோகிலா, தாசில்தார்கள் சுப்பையா, பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்