பா.ஜனதா மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா - கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர்,
இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். மேலும், அவர் திருப்பூர் ஷெரிப்காலனியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதற்கிடையே இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:- நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று (நேற்று) காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.