திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 149 பேருக்கு கொரோனா - 46 பேர் குணமடைந்தனர்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-09-17 15:45 GMT
திருப்பூர், 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு கோர தாண்டம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையே நெருங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 652 ஆக இருந்தது. கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் பாதிப்பு இருந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருப்பூருக்கு புலம்பெயர்ந்து வருகிற தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெளிபகுதிகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வரும் போது, அவர்களுக்கு முறையான பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை மாவட்ட நிர்வாகம் தனிக்கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 75 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 116 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 30 பேர் கண்காணிக்கப்பட்டும் வருகிறார்கள்.

மேலும் செய்திகள்