கள்ளக்குறிச்சியில், தீக்குளித்து தொழிலாளி சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-17 14:45 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி ராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). தொழிலாளி. இவரது மகள் சினேகா. இவள் வீட்டின் பின்புறம் கழிவுநீர் வாய்க்கால் கரையில் இருந்த செடியில் சுண்டைக்காய் பறித்துள்ளாள். இதைபார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் சினேகாவையும், அவளது தம்பியையும் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த சுரேஷ் தனது மனைவி சுமதியுடன் சேர்ந்து சென்று கொளஞ்சியிடம் பொது இடத்தில் உள்ள செடியில் இருந்து சுண்டைக்காயை பறித்த என் குழந்தைகளை ஏன் அடித்தீர்கள் என்று கூறி தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கொளஞ்சி தனது மகன் வேலு என்பவருடன் சேர்ந்து கொண்டு அவர்களை தாக்கியதாக தெரிகிறது. மேலும் சண்டையை விலக்கிவிட்ட சுரேசின் உறவினர் சீதாராமனையும் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், சுமதி, சீதாராமன் ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட சண்டையால் அவமானம் அடைந்த சுரேஷ் மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுரேசை தற்கொலைக்கு தூண்டியதாக கொளஞ்சி, வேலு ஆகியோரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்