காமராஜர் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-09-17 14:30 GMT
மதுரை, 

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்கள் கட்டாயமாக ஆன்லைன் தேர்வுகளை எழுத வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இந்த தேர்வுகளை நடத்த உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களுக்கு அவரவர் துறை சார்பாக கேள்வித்தாள்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்-அப்பில் அனுப்பப்படும். தேர்வுகளை வீட்டில் இருந்தபடி எழுதி, அதை ஸ்கேன் செய்து ஒரு மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தேர்வு அதிகாரிகளுக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் நேர்மையாக காப்பி அடிக்காமல் எழுதினார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றோர்கள் விடைத்தாளில் கையொப்பம் இட வேண்டும் என கூறியுள்ளது.

இந்த அவசர தேர்வு முறையை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கல்வியை இவ்வளவு மோசமான ஒரு கேலிப்பொருளாக பல்கலைக்கழகங்களும், அரசும் மாற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், இப்போது வாட்ஸ்-அப்பில் வினாத்தாளை பார்த்து, வீட்டிலிருந்தே பதிலை எழுதி அனுப்பலாம் என்பது எந்த வகை கல்விமுறை என்று தெரியவில்லை. அதற்கு பதிலாக, இதுவரையுள்ள பருவத்தேர்வு மதிப்பெண்களை வைத்து தீர்மானிக்கலாம் அல்லது பாதுகாப்பை உறுதிசெய்து இறுதியாண்டு மாணவர்களை மட்டும் வரவழைத்து நேரடியாக கல்லூரிகளில் தேர்வு எழுத சொல்லியிருக்கலாம்.

கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் இந்த முறையில் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயலாகும். இதுபோன்ற தேர்வுகள் நடத்துவதை பல்கலைக்கழகங்கள் கைவிட வேண்டும்.

கல்லூரி வரை வரச்சொல்லும் பல்கலைக்கழகங்கள், தேர்வை பாதுகாப்புடன் எழுத வைக்கலாம். தேர்வு முறைகளை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி மாணவர்களை தற்கொலை வரை தள்ளுவதும், மறுபுறம் விதிகளை மிகவும் தளர்த்தி, மாணவர்கள் தவறான முறைகளை பின்பற்ற கூடிய வாய்ப்புகளை உருவாக்குவதும் வருங்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்