ராமநாதபுரம் வாலிபர் கொலை: சரணடைந்தவர்கள் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம்

ராமநாதபுரம் வாலிபர் அருண்பிரகாஷ் கொலை சம்பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது குறித்து கோர்ட்டில் சரணடைந்தவர்கள் போலீஸ் காவலில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.;

Update: 2020-09-17 14:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி வசந்த நகரை சேர்ந்த வாலிபர் அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். இதில் அருண்பிரகாஷ் பலியானார். யோகேஸ்வரன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதுதொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் பாம்பூரணி சேக் என்ற லெப்ட் சேக் அப்துல் ரகுமான் (வயது24), மருதுபாண்டியர்நகர் சதாம்உசேன் (21), பாரதிநகர் முகம்மது அஜிஸ் (21), ஓம்சக்திநகர் காசிம்ரகுமான் (24), பாம்பூரணி வாப்பா ராசிக்அலி (23), வைகை நகர் வெள்ளை சரவணன் (24), எலி விஜய் (22) ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் ராமநாதபுரம் வைகை நகர் ஹரிகரன் (25) என்பவரை போலீசார் கைதுசெய்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறிமுதல் செய்தனர். இவர்கள் 8 பேரையும் கோர்ட்டு அனுமதியுடன் கேணிக்கரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் கொலை குறித்து பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 31-ந் தேதி பிற்பகலில் கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன், சரத்குமார், பிரபு, பாண்டியராஜன், காமாட்சி ஆகியோர் வசந்தநகர் அருகில் உள்ள தனியார் பள்ளி வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்களாம்.

அப்போது அந்த வழியாக வைகை நகர் வெள்ளை சரவணன், சபீக் ரகுமான் ஆகியோர் வந்துள்ளனர். இவர்களுக்கும் காமாட்சி மற்றும் அருண்பிரகாஷ் தரப்பினருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்து வந்ததால் காமாட்சி என்பவர் அவர்களை பார்த்து இந்த பகுதிக்குள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டு இருவரையும் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த வெள்ளை சரவணன், சபீக்ரகுமான் ஆகியோர் அங்கிருந்து சென்று தாங்கள் தாக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த லெப்ட் ஷேக், எலிவிஜய் உள்ளிட்ட கும்பல் காமாட் சியை தாக்கும் எண்ணத்துடன் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வசந்தநகரை நோக்கி வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்தபோது காமாட்சி தப்பி ஓடியதால் அவருடன் இருந்த அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ் வரனை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் மற்றும் செல்போன் கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற 7 பேரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்படி தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு காரணங்களுடன் தகவல் பரவி வந்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சரணடைந்தவர்கள் விசாரணையில் தெரிவித் துள்ளதால் கொலை சம்பவத்தின் உண்மை நிலை தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்