விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான 2018-19-ம் ஆண்டிற்கான பயிர் இழப்பீட்டு தொகை 117 கிராமங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ளது.5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள 6,901 பெரு விவசாயிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
இதில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக கால தாமதம் என்று காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சொல்கிறார்கள். 117 கிராமங்களுக்கு 25 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க முடியும் என்று காப்பீட்டு நிறுவனம் கூறியதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், மத்திய வேளாண்மை துறை அமைச்சகமும் நிராகரித்து விட்டது.
100 சதவீத காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு 117 கிராமங்களுக்கும் 100 சதவீத காப்பீட்டு தொகை வழங்குவதற்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம். விவசாயம் செய்வதற்கே சவாலான சூழல் உள்ள மாவட்டத்தில், பயிர் விளையாத சூழலில் பயிர் இழப்பீட்டு தொகையும் வழங்காததால் விவசாயிகள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். எனவே உடனடியாக மத்திய அரசு இந்த கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க விவசாய இன்சுரன்ஸ் கம்பெனியை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.