விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பு
ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி 33-வது ஆண்டாக சிம்ம வாகன கணபதி, ராஜயோக கணபதி, கொரோனா நோயை கட்டுப்படுத்தும் கணபதி, ஆசீர்வாத கணபதி என வித்தியாசமான உருவங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலம் கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை நீக்கி, இந்த சிலைகளை நாங்களே கரைக்க அனுமதி வழங்க வேண்டும் என நற்பணி மன்றம் சார்பில் கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மாலை அந்த விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் நிலையம், சங்கரன் கோவில் முக்கு வழியாக பெரியாதி குளம் கண்மாயில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி தன்வந்திரி யாகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் ராம்ராஜ் செய்திருந்தார்.