ஜோலார்பேட்டை அருகே, கொதிக்கும் பால் கொட்டி 3 வயது சிறுமி பலி- வீட்டு முன் விளையாடியபோது விபரீதம்
ஜோலார்பேட்டை அருகே வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கொதிக்கும் பால் கொட்டியதில் உடல் வெந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மூக்கனூர் ராமசாமி வட்டத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ‘வெல்டிங்’ வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீநிகா (வயது 3). சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஸ்ரீநிகா வீட்டு முன் விளையாடுக்கொண்டு இருந்தாள். அப்போது சமையலறைக்கு விளையாட்டுத் தனமாக ஸ்ரீநிகா சென்றாள். அடுப்பின் அருகே சென்றபோது அங்கிருந்த எதையோ தொடவே அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த பால் ஸ்ரீநிகா மீது கொட்டியது. இதில் உடல் வெந்த இவள் கதறவே பெற்றோர் ஓடி வந்து அவளை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநிகாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி ஸ்ரீநிகா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டாள்.
இது குறித்து உறவினர் சத்தியமூர்த்தி என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.