வேலூர் மாவட்டத்தில், போலீஸ்காரர் உள்பட 81 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் உள்பட 81 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

Update: 2020-09-16 11:30 GMT
வேலூர், 

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ்காரருக்கு சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து அவருக்கு சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த போலீஸ்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அனைவருக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளன. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

வேலூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பெயிண்டர், ஆட்டோ டிரைவர், ரியல் எஸ்டேட் அதிபர், 2 வியாபாரிகள், பொய்கையில் 9 வயது சிறுவன், மதிநகரில் 72 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 28 பேர் என்று மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 81 பேருக்கு கொரோனா உறுதியானது.

தொற்று பாதித்த 81 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 12,930 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,626 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்