கெலமங்கலம் அருகே பஸ் டிரைவர் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை

கெலமங்கலம் அருகே தனியார் பள்ளி பஸ் டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-09-16 02:37 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவருடைய மகன் ரங்கநாதன்(வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டு முன்பு நின்று இருந்தார்.

அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ரங்கநாதனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரங்கநாதன் முன்விரோதத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரங்கநாதன் சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்