வாரச்சந்தைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்

வாரச்சந்தைகளை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.;

Update: 2020-09-15 02:35 GMT
மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அப்போது கலெக்டரிடம் பொதுமக்கள் நேரிடையாக மனுக்கள் அளிப்பார்கள். அந்த மனுக்கள் மீது கலெக்டரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த குறைதீர்க்கும் முகாம் நடைபெறவில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் தற்போது வழக்கம் போல் திங்கட்கிழமைகளில் மனு கொடுக்க வருகின்றனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வல அமைப்பினரும் மனுக்கள் கொடுக்க வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தால் மனு கொடுக்க கலெக்டர் அலுவலக முதல் மாடியில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் எப்போது வேண்டுமானாலும் மனுக்களை போடலாம். ஆனால் ஏராளமானோர் திங்கட்கிழமையன்று மட்டும் மனு கொடுக்க குவிந்து விடுகின்றனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர். எனவே முன்னெச்சரிக்கையாக போலீசார் கலெக்டர் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டமாக வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒவ்வொருவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மதுரையில் உள்ள வாரச்சந்தைகள் திறக்க அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் வாரச்சந்தையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும். வாரச்சந்தை வியாபாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும். அவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.10 ஆயிரம் கடன் தொகையை, வங்கி உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்