அஞ்சுகிராமம் அருகே பரிதாபம்: வாத்து மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி சாவு
அஞ்சுகிராமம் அருகே வாத்து மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமையா(வயது 77). இவருக்கு அய்யப்பன்(38) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.
ராமையா தனது வீட்டில் வாத்து, கோழிகளை வளர்த்து வருகிறார். தினமும் அவற்றை லெட்சுமிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இரவு அருகில் உள்ள தோப்பில் அடைத்து வைப்பது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு வட்டக்கோட்டை அடுத்த புதுக்குளம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாத்து, கோழிகளை அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட சென்றார். அவ்வாறு செல்லும்போது காலை 8 மணிக்கு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வருவது வழக்கம். ஆனால், காலை 9 மணி வரை அவர் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மகன் அய்யப்பன், ராமையாவை தேடி புதுக்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது, புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வயல்வெளியில் மின்கம்பத்தின் அருகில் நின்ற இரும்பு குழாயை பிடித்தபடி ராமையா இறந்து கிடப்பதை கண்டு அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார். வரப்பில் நடந்து சென்றபோது நிலைதடுமாறியதால் இரும்பு குழாயை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து அய்யப்பன் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாத்து மேய்ச்சலுக்கு சென்ற முதியவர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.