8,638 மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகின்றனர் - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8,638 மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வை இன்று எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-09-13 05:30 GMT
வேலூர்,

இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, வி.ஐ.டி., சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, டி.கே.எம். கல்லூரி உள்பட 15 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 8 ஆயிரத்து 638 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தேர்வு மையங்களில் மும்முரமாக நடைபெற்றது.

தேர்வர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மையங்களில் வட்டமிடும் பணிகள் நடைபெறுகிறது. சில தேர்வு மையங்களில் தடுப்புகள் கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

பல நாட்கள் பயன்படுத்தப்படாதல் தேர்வறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தேர்வறை முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேசைகள் இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளன.

தேர்வெழுத வரும் மாணவர்களின் உடல் வெப்ப அளவு கண்டறிய அனைத்து தேர்வு மையத்திலும் தெர்மல் ஸ்கேனர் கருவி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் தண்ணீர் வசதி செய்யப்பட்டு கை கழுவும் திரவம் ாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தேர்வர்களுக்கு தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். தேர்வு எழுத வருகை தரும் மாணவ- மாணவிகள் வழக்கமான விதிமுறைகளை பின்பற்றவும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ‘நீட்’ தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுப்புற மாவட்டங்களில் சிறப்பு பஸ்களும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து காட்பாடி, கே.வி.குப்பம், அரியூர் ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0416-2258016, 2258019 என்ற தொலைபேசி எண்ணிலும், 9154153692 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்