ஓட்டல், இறைச்சி கடைகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 10 மின் மோட்டார்கள் பறிமுதல் - விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் உள்ள ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் பல இடங்களில் விதிகளை மீறி மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் நேருஜி சாலை, எல்லீஸ்சத்திரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஒவ்வொரு கடை, கடையாக சென்று யாரேனும் நகராட்சி குடிநீர் குழாயிலிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை முறைகேடாக உறிஞ்சுகிறார்களா? என ஆய்வு செய்தனர்.
அப்போது ஓட்டல்கள், மெஸ்கள், சிக்கன் கடைகளில் விதிகளை மீறி மின் மோட்டாரை பயன்படுத்தி நகராட்சி குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக தண்ணீரை அதிகளவில் உறிஞ்சி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 10 கடைகளில் மின் மோட்டார் மூலம் குடிநீரை அதிகளவில் உறிஞ்சி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து முறைகேடாக தண்ணீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 10 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அந்த கடைகளின் குடிநீர் இணைப்புகளையும் துண்டிப்பு செய்தனர். மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், நகராட்சி குடிநீர் குழாயில் இருந்து முறைகேடாக மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். வீடுகள், கடைகளில் அதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிப்பு செய்யப்படும். மேலும் விழுப்புரம் நகராட்சியில் பலர், குடிநீர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இவ்வாறாக கடந்த 10 வருடமாக ரூ.5 கோடி வரை குடிநீர் வரிபாக்கி உள்ளது. எனவே குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக அந்த பாக்கி தொகையை செலுத்த வேண்டும் என்றார்.