சேலம் மாவட்டத்தில், 30 மையங்களில் இன்று நீட் தேர்வு - 15,138 பேர் எழுதுகிறார்கள்
சேலம் மாவட்டத்தில் இன்று 30 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இதனை 15 ஆயிரத்து 138 பேர் எழுத உள்ளனர்.
சேலம்,
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் 15 ஆயிரத்து 138 மாணவ- மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது ஆத்தூர் அம்மன் நகர் ஜெய் வின்ஸ் அகாடமி, காகாபாளையம் நாலெட்ஜ் கல்லூரி, சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி, மின்னாம்பள்ளி மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி, மேச்சேரி காவேரி என்ஜினீயரிங் கல்லூரி, சூரமங்கலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.பெருமாபாளையம் சேலம் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விநாயக மிஷன் கிருபானந்த வாரியர் என்ஜினீயரிங் கல்லூரி, ராமகிருஷ்ணாபுரம் வைஸ்யா கல்லூரி, பெரிய சீரகாபாடி அன்னபூரணா என்ஜினீயரிங் கல்லூரி, ராமலிங்கபுரம் ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாபேட்டை சக்தி கைலாஸ் பெண்கள் கல்லூரி, அம்மாபேட்டை ஸ்ரீவித்யாமந்திர் சீனியர் செகன்டரி பள்ளி, அயோத்தியாபட்டினம் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி, சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, கொண்டப்பநாயக்கன்பட்டி சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி உள்பட 30 மையங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.
இந்த மையங்களில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடக்கிறது. அதாவது, தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் காலை 11.40 முதல் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு கொரோனா நோய் தொற்றோ? அல்லது அதற்கான அறிகுறிகள் இல்லை என்று உறுதிமொழி எழுதி தரவேண்டும். தேர்வு மையத்துக்கு வரும்போது சானிடைசர் கொண்டு வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
முக கவசம் மற்றும் கையுறைகளை மாணவர்கள் கட்டாயம் அணிந்து வரவேண்டும். ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 தேர்வு மையங்களிலும் நேற்று காலை முதல் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்வு எண் ஒட்டும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே தேர்வை கண்காணிக்க சப்- கலெக்டர்கள் நிலையிலான 9 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 70-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நீட் தேர்வு எந்த மையங்களில் நடைபெறுகிறதோ? அந்த பகுதிகளுக்கு அதிகாலை முதலே இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.