கரூர் வெங்கமேடு பகுதியில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர் வெங்கமேடு பகுதியில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-09-12 22:00 GMT
கரூர்,

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே செல்லும் சாலையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாள்தோறும் தரைக்கடைகள் அமைத்து காய்கறிகள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு காய்கறி கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் மீண்டும் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முயன்றனர்.

இதனால் கரூர் நகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகள் அங்கு அமைக்ககூடாது என உத்தரவிட்டனர். மேலும் சாய்பாபா நகரில் உள்ள இடத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே நடைபெற்று வரும் இடத்திலேயே மீண்டும் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறி வந்தனர்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகளுக்கு இடையேயான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று வியாபாரிகள் சந்தை அமைக்கும் இடத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்த நகராட்சிக்கு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்