திருச்சியில் இன்று ‘நீட்’ தேர்வு 22 மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தல்
திருச்சியில் இன்று ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ள 22 மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. தேர்வுக்கு வரும் மாணவ- மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி,
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (‘நீட்’) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துகிறது. இந்தாண்டு ‘நீட்’ தேர்வை திருச்சி மாவட்டத்தில் உள்ள 22 மையங்களில் 9 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவற்றில் மாநகரில் 3 மையங்களும், புறநகரில் 19 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடக்கிறது.
திருச்சி மற்றும் அதைச்சுற்றியுள்ள புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் திருச்சி மாவட்டத்தில் தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கரூர் மாவட்டத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு 3 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2,103 பேர் எழுதுகின்றனர். பொதுவாகவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் 300 பேர் முதல் 700 பேர் வரை தேர்வு எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு வகுப்பறையில் 24 மாணவர்கள் வீதம் தேர்வு எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அது 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் நேற்று முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்து செல்வதற்காக தேர்வு மையங்களின் நுழைவாயில் அருகே பாத சுவடுகள் வரையப்பட்டுள்ளது. இது தவிர, தேர்வு மையத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு, கிருமிநாசினி திரவம் மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் கிருமிநாசினி திரவம் வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ‘நீட்’ தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக சிறப்பு பஸ் போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘நீட்’ தேர்வு மையங்களில் பணியாற்ற உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று அந்தந்த மையங்களில் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.