‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: அன்னவாசல் பகுதியில் வாரச்சந்தைகள் செயல்பட்டன - பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அன்னவாசல் பகுதியில் வாரச்சந்தைகள் செயல்பட்டன. அங்குள்ள கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Update: 2020-09-12 22:15 GMT
அன்னவாசல்,

அன்னவாசல் பகுதிகளில் முக்கண்ணாமலைப்பட்டி, மதியநல்லூர், பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, மலைக்குடிப்பட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் வாரச்சந்தைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக வாரச்சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாரச்சந்தைகள் நடைபெறாததால் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், வாரச்சந்தைகள் செயல்பட அனுமதி அளிப்பது குறித்து தினத்தந்தி நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு காரணமாக அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, மதியநல்லூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெற்ற வாரச்சந்தை நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இதையொட்டி அப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். காய்கறிகள், பழவகைகள், வெங்காயம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டன. 6 மாதங்களுக்கு பிறகு சந்தை செயல்பட தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாரச்சந்தைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கினர். இனி வாரந்தோறும் சந்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. வாரச்சந்தை செயல்பட தொடங்கிய நிலையில் அங்குள்ள மீன் விற்பனை செய்யும் பகுதியில், குறைந்த விலையில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்