முகவரி கேட்பதுபோல் நடித்து பெண்களிடம் நகைகள்-செல்போன்களை பறித்து செல்லும் வழிப்பறி கொள்ளையர்கள் - போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

முகவரி கேட்பதுபோல் நடித்து தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் நகைகள், செல்போன்களை மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் பறித்து செல்லும் சம்பவங்கள் தஞ்சை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-09-12 22:00 GMT
பிள்ளையார்பட்டி,

தஞ்சை புதிய பஸ் நிலையத்தை அடுத்து உள்ள புதுக்கோட்டை சாலை பகுதி, அசோக் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் தஞ்சை-திருச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் சமீப காலமாக தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் நகைகள் மற்றும் செல்போன்களை பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் தனியாக செல்லும் பெண்களை இந்த வழிப்பறி கொள்ளையர்கள் கண்காணிப்பார்கள். ஆட்கள் இல்லாத பகுதியில் அந்த பெண்கள் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வரும் மர்ம நபர்கள், ஒரு காகிதத்தை காட்டி முகவரி கேட்பது போல் கேட்பார்கள்.

அந்த பெண்களும், வந்தவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பதை அறியாமல் உண்மையிலேயே முகவரி கேட்பவர்கள் என்று எண்ணி அந்த காகிதத்தை வாங்கி பார்ப்பார்கள். அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், அந்த பெண்கள் கழுத்தில், காதில், கையில் அணிந்து இருக்கும் நகைகளை பறித்து செல்வார்கள். அத்துடன் விடாமல் அவர்கள் விலை உயர்ந்த செல்போன் வைத்து இருந்தால் அதையும் பறித்து சென்று விடுவார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் நகர் நான்காம் தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள், ஏதோ கேட்பது போல் பேசி அவரது தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். உடனடியாக அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். சரியான நேரத்தில் அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த பெண் அணிந்து இருந்த சங்கிலி கொள்ளையர்களிடம் பறிபோகாமல் தப்பியது.

அதேபோல் திருவள்ளுவர் நகர் ஐந்தாம் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் ஒருவர் செல்போனில் பேசியபடி தனியாக நடந்து சென்றுள்ளார். இதை நோட்டமிட்டு வந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள், மாணவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தஞ்சை அருகே உள்ள மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் சரண்யா. திருவையாறு அருகே திருப்பழனத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் உதவி கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீட்டுக்கு தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார்.

தஞ்சை ரெட்டிப்பாளையத்தை அடுத்த 8-ம் நம்பர் கரம்பை என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 10½ பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

சமீப காலமாக அடிக்கடி நடைபெற்று வரும் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஒரு சிலர் மட்டுமே நடந்த சம்பவங்களை புகாராக தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களால் வெளியில் தனியாக செல்வதற்கே பெண்கள் ஒருவிதமான அச்சத்தில் உள்ளனர். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட ஒருவித அச்சத்துடனேயே தனியாக சென்று வருகிறார்கள்.

எனவே இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்கவும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்